Monday, January 21, 2013

ஸத்குரு வாழ்த்து

ஓம் நமோ பகவதே ஞானானந்தாய!
ஸத்குரு வாழ்த்து
( நேரிசை ஆசிரியப்பா )
நித்த னி ருமல னி ராமயன் ,பூரணன்
சுத்த பரஞ்சுடர் சுயம் பிரகாசன்
ஞாலம் வணங்கும் ஞானானந்தமாய்
உலகெலாம் உணரும் உண்மையறிவாய்,
அறம் பொருள் இன்பம் அழியா வீடென
திறம்படக் காட்டிய செம்மை நெறியினன்,
தன்னை யறிவித்துத் தற்பரமாக்கி
என்னு ளத்திருந்த ஏக நாயகன்.
பந்தமனைத்தும் பாழ்படத் தள்ளியென்
சிந்தையுட் புகுந்த செழுஞ் சுடர் ஜோதி.
எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி
தில்லையில் கண்டு தினமும் களித்தவன்
இறவா மனத்தை இறக்க உணர்த்திப் பிறவா
நெறி தரும் பேரறிவாளன்.
நற்குண மனைத்தும் நண்ணிய பெருந்தகை
சற் குரு ஞானானந்த சாந்த மெய்ச் செல்வன்.
பூத முதலாய் பொலிந்திடு நாத ஒளியை,
பேத முங் கடந்த பெருந்தகை மூர்த்தி
மூலாதார முதலாயுள்ள மூர்த்தி ரூபத்தை
மேலா றாதாரமும் வெறு வெளி கண்ட வித்தகன்.
மண்டல மூன்றிலும் மண்ணிய உருவிலும்
கண்டவை அனைத்திலும் கடவுளாய் நின்றோன்.
ஸோகம் பாவனை சுத்தமாய் ச் செய்யென
ஆகம நூல் கொண்டு அன்போடுணர்த்தி,
சங்கரன் காட்டிய சனகாதி நால்வருக்கு
இங்கிதமாய் எடுத்துரைத்த சின் முத்திரையை
வாக்கிறந்த பூரணமாய் மறைக் கப்பாலாய்
தேக்கிறந்த எல்லாமாய் அல்லவுமாயிருந்து
திரையிலாக் கடல் போல சலனம் தீர்ந்து
இரையுடல் மறந்து இன்ப நிலை காட்டி,
ஒரு மொழியாலே உண்மை உணர்த்தி
திரு உணர் வாளன்  மருளிலா மனத்தன்,
எண்ணிய எண்ணமெல்லாம் தெரிந்து எனக்கு
தண்ணருள் செய்த ஞானானந்த தற்பரன்.
ஒரு மொழி பகர்ந்த உதவியாலவன்றன்
இருபத முப்போ திறைஞ்சி வாழ்த்துவனே.!


எடப்பாடி கோ. வை. சின்ன ஆறுமுக பக்தர்.

ஞானானந்த சுவாமி அருள் பெற்ற இவரால் எழுதப் பட்டதை இங்கு பதிவு செய்வதில் குரு க்ருபை அருள் செய்தது.

Thursday, August 25, 2011

ஸ்ரீ ஞானானந்தரின்

சுறுசுறுப்பாயிரு, ஆனால் பொறுமையாயிரு!
பொறுமையாயிரு, ஆனால் சோம்பலாயிராதே!
சிக்கனமாயிரு, ஆனால் கருமியாயிராதே!
அன்பாயிரு, ஆனால் அடிமையாயிராதே!
இரக்கங்காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே!
கொடையாளியாயிரு, ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே!
வீரனாயிரு, ஆனால் போக்கிரியாயிராதே!
இல்லறத்தை நடத்து, ஆனால் காமவெறியனாயிராதே!பற்றற்றிரு, ஆனால் காட்டுக்கு போய்விடாதே!
நல்லோரை நாடு , ஆனால் அல்லோரை வெறுக்காதே!

Monday, January 10, 2011

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

தூங்கிய கங்கை எழுந்தது தெய்வப் பொலிவு தழைத்திடவே
செங்கதிரோனும் உதய கிரி கண் சேரவரும் தருணம்
மங்கள கீதம் முழங்கியதெங்கும் மந்திரம் ஓங்கின காண்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்
பார்முழுதும் சிவ பரிமள மோங்க பள்ளி யெழுந்தருள்வாய்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்!

தேவரும் முனிவரும் திரளாய் வந்து திருப் பணி புரிகின்றார்
ஆவலுடன் நின தரண் மனை வாயிலில் அரசரும் நிறைகின்றார்
சேவல் எழுந்தது சங்கோடு துந்துபி ஜெய ஜெய என்பது காண்
பாவனி கெளரி பவானி மகேஸ்வரி பள்ளி எழுந்தருள்வாய்!

சஞ்சல இரவு முடிந்தது சமரச சாந்த சமாதியினுள்
மஞ்சுள வனஜம் மலர்ந்தது ஹம்ச மனோஹர வாரியிலே
விஞ்சிய இன்பம் மிதந்து தவழ்ந்தது வேத மிசைப் பது காண்
பஞ்ச மனோபவ ரூபிணி பகவதி பள்ளி எழுந்தருள்வாய்!

முருகனும் மதகஜ வதனனும் நின் திரு முன் வர வருகின்றார்
அருளலைப் போல் ஹர ஹர யெனும் அடியவர் அவர் பின்னர் வருகின்றார்
தருமம்  தழைய தவ முறை வளர தரணி விளங்கிடவே
பருகிய கருணைப் பெருகவுமினி நீ  பள்ளி யெழுந்தருள்வாய்!

Tuesday, January 4, 2011

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

குரு மொழி கொண்டு நன்னெறி நின்ற பக்தர் தம்
உத்தம உலாக் கமலங்கள் மலரவும்
இருள் வழி சென்றுளம் அலமந்து நிற்குமிவ்
விரு நில மாந்தரின் மருளெல்லாம் மாறவும்
பொருளீட்டும் வெறி நீங்கி பூதலத்தோரெல்லாம்
பூரண இன்பம் பெரும்வழி எய்தவும்
அருள் தேடும் அன்பரைக் காக்கும் ஞானானந்தப்
பரம் பொருளே பள்ளி  யெழுந்தருளாயே!

அன்னையின் மிக்க நின் அன்பினைக் காணவும்
மின்னும் நின் பொன்முகம் கண்டு களிக்கவும்
பின்னும் நின் தாமரைத் தாள்களில் வீழ்ந்து நின்
புன்முறுவல் தனைக் கண்டுளம் பொங்கவும்
இன்னல்கள் நீக்கும் நின் தண் ண ளிப் பார்வையும் 
இன்சொல்லும் பெற்றவர் தன்னை மறக்கவும்
முன்னைத் தவம் செய்தோர் வந்து நின்றார் ஞான
மன்னவனே பள்ளி யெழுந்தருளாயே!

பூமாலை கொண்டு நற் புண்ணியர் வந்துனை
வாழ்த்தி வணங்கிடக் காத்து நிற்கின்றார்
பாமாலை கொண்டுனைப் போற்றும் பக்தரெலாம்
பாடிப் பரவசமாகி நின்றார் உந்தன்
நாமாவை நாவார நாளும் பாடும் இவர்
நோக்கம் உந்தன் கடைக் கண்ணோக்கம் இந்நோக்கம்
ஆமாறருள் செய்ய அமல ஞானனந்த க்
கோமானே பள்ளி யெழுந்தருளாயே!

வடமொழி வேதத்தின் வாழ்த்தொலி கேட்கவும்
குடமுனி கீதங்கள் மடந்தையர் பாடவும்
உடனிருந் துறு பணி உவகையோடியற்றிட
உம்பரும் வந்து நும் மருங்கினில் நின்றார்
மிடியினை நீக்கி பவப் பிணி போக்கிடும்
தெய்வத் தபோவனத் தமர்ந்த ஞானனந்த
வடிவினில் அடியரை வாழ வைக்க வந்த
வள்ளலே பள்ளி யெழுந்தருளாயே!

முற்றும் துறந்த முனிவரும் கைதொழ
கற்றவர் கண்டு வியந்து மகிழ்ந்திட
குற்றேவல் செய்ய குவலயத் தொரன்றி
மற்றுலகத் தோறும் வந்து நின்றார்
குற்றம் செய்தோர் உந்தன் பொற்கழலுற்றவர்
குற்றம் நீங்கி நலம் பெற்றவர் உய்ந்திட
நற்றவத் தோரெல்லாம் நாடும் ஞானனந்தக்
கொற்றவனே பள்ளி யெழுந்தருளாயே!
 

வணக்கம்

ஞானானந்தா நமோஸ்துதே!
ஞானசத்குரோ  நமோஸ்துதே!
அத்புத சரிதா நமோஸ்துதே!
ஆனந்த ரூபா நமோஸ்துதே!
இன்பப்பொருளே நமோஸ்துதே!
ஈசனும் நீயே நமோஸ்துதே!
உம்பர்கள் தருவே நமோஸ்துதே!
ஊமைக்கருள் செய்தவா நமோஸ்துதே!
எங்கள் தெய்வமே நமோஸ்துதே!
ஏழைக்கெளியாய் நமோஸ்துதே!
ஐங்கர ப்ரியனே நமோஸ்துதே!
ஐயம் தீர்ப்பாய் நமோஸ்துதே!
ஒப்பிலா மணியே நமோஸ்துதே!
ஓங்காரப்பொருளே நமோஸ்துதே!
ஔஷ தம் நீயே நமோஸ்துதே!
அனைத்தும் நீயே நமோஸ்துதே!
ஞான சத்குரோ நமோஸ்துதே!
ஞானானந்தா நமோஸ்துதே!